மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும், மேலும், எல்கேஜி போன்ற தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் ஃபெயில் ஆக்கக் கூடாது. அவர்களை அடிக்கவோ, மன ரீதியாக துன்புறுத்தவோ கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசே ஏற்றுக் கொண்டது. ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சட்டம் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகள் எல்லாம், இந்த ஒதுக்கீட்டின்படி மாணவர்களைச் சேர்த்துவிட்டோம்’ என்றுகூறி, அரசின் நிதியைப் பெற்று வந்தன. கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 100 கோடி ரூபாய் வரையில் கணக்கு காட்டப்பட்டது. ‘ இவற்றுக்கான கணக்குகள் அனைத்தும் போலியானவை’ என பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சுமத்தினர். ‘மாணவர் சேர்க்கையின்போது, பல்லாயிரம் ரூபாய்களைத் தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்த்துக் கொண்டதாக பொய்க் கணக்கு எழுதுகின்றனர். இதனைத் தட்டிக் கேட்கும் பெற்றோரின் குழந்தைகள் பழிவாங்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளின் லாப வேட்டையை கல்வி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு காரணம் பெற்றோர்களிடையே இந்த சட்டத்தைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே. இளையதலைமுறை சார்பாக தமிழகம் முழுவதும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தத் துவங்கியுள்ளோம்.
RTE விழிப்புணர்வு, கோவிலம்பாக்கம் – ஏப்ரல் 2017
இலவச கட்டாய கல்வி சட்டம் (Right to Education Act): கோவிலம்பாக்கம் பகுதியில், ஞாயிறு அன்று 3 தெருக்களில் LKG சேர போகும் 6 குழுந்தைகளை கண்டறிந்தோம்… இன்று மேலும் 3 தெருக்களில் 4 குழந்தைகளை கண்டறிந்தோம்.
எங்கள் பகுதியில் சுமார் 10,000 குடும்பங்கள் உள்ளன. அனைவரையும் சென்று சேர்வது மிக கடினம் என்பதால், பஞ்சாயத்து அலுவலகம் சென்றிருந்தோம். அங்கு உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்தோம்.
அது மட்டுமல்லாமல், மகிளர் சுய உதவி குழுவினரிடம் உரையாடினோம். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களிடம் உரையாடினோம்.
அவரவர் தெருக்களில் உள்ளவர்களிடம் இதை பற்றி எடுத்து கூறுங்கள் என அவர்களிடம் கூறினோம்… ஏப்ரல் 20 அன்று online மூலம் பூர்த்தி செய்து தருவதாக கூறினோம்.
பலரும் கூறியது… எங்களுக்கு ஸ்கூல்ல சீட்டு வாங்கி கொடுத்தீங்கனா, உங்களுக்கு புண்ணியமா போகும்… நாங்க சம்பாரிக்கிற முக்காவாசி பணம், ஸ்கூல் பீஸ் கட்டவே போகிறது.
ஏன் அரசு பள்ளிகளில் சேர்க்க வில்லையா என கேட்ட போது, நாங்கள் தான் படிக்க வில்லை. எங்கள் பிள்ளைகளையாவது நன்றாக படிக்க வைத்து, உங்களை போல நல்ல வேலைக்கு சென்று சம்பாரிக்க வைக்க வேண்டும்; நாங்களும் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக உள்ளது என கூறினர்.
நண்பர்களே, வாட்ஸ்அப் & முகநூலில் பகிர்வதால் மட்டுமே நம் கடமை முடிவதாக எண்ணாமல், களத்தில் இறங்கி இது போன்ற ஏழை மக்களுக்கு உதவ முன் வரலாமே!!! நாம் சந்தித்த பலரும் கூலி வேலை செய்பவர்கள்; வாட்ஸ்அப் / Facebook பார்த்திராத மக்கள்… ஆகவே அவர்களுக்கு RTE பற்றி விழிப்புணர்வு செய்து online மூலம் பூர்த்தி செய்ய உதவி செய்யவும்.
RTE விழிப்புணர்வு, கோவிலம்பாக்கம் – மே 2017
நேற்று வெல்க பாரதம் அமைப்போடு சேர்ந்து, கோவிலம்பாக்கம் பகுதியில் RTE பற்றிய விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளுக்கு நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தோம்.
தனியார் பள்ளிகளில் இலவசமாக LKG இல் சேர்க்க இன்னும் 6 நாட்களே உள்ளன. தாலுக்கா அலுவலகத்தில் வருமான சான்றிதழ் விண்ணப்பித்து கிடைக்க பெறாதவர்கள், பெற்றோரின் ஜாதி சான்றிதழ் (வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் வகையில்) இருந்தால் அதை வைத்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணபிக்க வேண்டிய லிங்க்:
விழிப்புணர்வு காணொளி: