அரசியலில் மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு அதற்க்கான சிறு முயற்சியையும் செய்யமால் வெறுமனே அரசியல்வாதிகளை குறைக்கூறி கொண்டு காலத்தை வீணடிக்கும் சாமானியர்களில் ஒருவனான எனக்கு, ஏனோ அதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கவும் செய்யும்.
ஆனால், தனி ஒருவானாய் எதையும் அரசியலில் சாதிக்கும் வல்லமை இந்த (எந்த) காலத்திலும் சாத்தியமில்லை என்பதில் நம்பிக்கை உடையவனாய் இருப்பதால், வேறெதற்க்கும் வழியில்லாததால், அனைத்து கட்சிகள் சார்ந்த கொள்கைகளையும், விவாதங்களையும் முன்னின்று கவனிக்கும் ஒரு சாதாரண (நண்பர்கள் மத்தியில் மட்டும்) அரசியல் விமர்சகனாய் காலத்தை கடத்தி வந்துள்ளேன்.
சமீபத்தில் முகநூல் பக்கமொன்றின் வாயிலாக இளையதலைமுறை இயக்கம் பற்றி தெரிந்து கொண்டேன். அதன் அமைப்பாளர் திரு. சங்கர் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஏற்கனவே சில சந்திப்புகளை நடத்தியதாகவும். 25/6/2015 அன்று ஒரு கலந்தாய்வு சென்னையில் நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஒரு புதிய மாற்று இளைய தலைமுறை அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டுமென என் கருத்துக்களையும் தெரிவித்திருந்தேன். எவையெல்லாம் அவர்களை மக்களிடம் எடுத்து செல்லும் என நான் எண்ணியிருந்ததை அவர்களிடம் தெரிவித்திருந்தேன்.
வந்திருந்தவர்களில் பேசிய சிலர் பலரது கவனத்தையும் கவர்ந்தனர். அதில் முக்கியமாக உதயா, உமா சங்கர், ப்ரேம் குமார், சுதீர் மற்றும் மணிகண்டன் போன்றோர். கலந்தாய்வில் நான் கூறிய கருத்துக்களை ஒரு பதிவாக தருமாறு, அதன் அமைப்பாளர் திரு. சங்கர் அவர்கள் கேட்டு கொண்டார். என்னால் முடிந்தவற்றை ஒரு தொகுப்பாக எழுதியுள்ளேன். மற்றவை உங்கள் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும்!
நான் கூட்டத்தில் பேசியவற்றில் ஒரு சில கருத்துக்களை இங்கே பதிவிட்டுள்ளேன்.
1. போராட்டம் 2. பிரச்சாரம் 3. முன்மாதிரி தலைவர்கள் 4. சாதியப்பற்று 5. சட்டமன்றமா? நகராட்சி மன்றமா? 6. கட்சி குழு / உறுப்பினர்கள் / தொண்டர்கள் 7. எதிர் கட்சி எதிரி கட்சி அல்ல!
1. போராட்டம்
நண்பர் ஒருவர் பேசும் பொழுது சமுதாய போராட்டம் தான் மக்களிடையே நம்மை கொண்டு சேர்க்கும் என கூறிக்கொண்டிருந்தார். அதற்கு வேறு சில நண்பர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தவண்ணமிருந்தனர். என்னுடைய கருத்தை நான் தெரிவிக்கக் கிடைக்கப் பெற்ற வாய்ப்பில் நான் கூறியது
போராட்டங்களால் தான் மக்களிடம் ஒரு கட்சி தங்களை கொண்டு சேர்க்க முடியும் என்பது ஒரளவு உண்மை என்றாலும், இதை தான் இன்று நீங்கள் / நாம் குறைக்கூறிக் கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்கள் கட்சி ஆரம்பித்த காலத்தில் செய்திருந்தனர் என்பதை உணருங்கள்.
மேலும், சமூக போராட்டங்கள் மட்டும் மக்களிடம் உங்களுக்கு அபிமானத்தை தேடித்தரும் என்றும் அவை வாக்குகளாக மாறும் என்றும் ஒருபோதும் நினைக்காதீர்கள். ஏனேனில், அது உண்மையெனில் இடதுசாரி கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்க வேண்டும். ஏனேனில் அவர்கள் தான் அதிக அளவு மக்கள் பிரச்சனைகளை தேடித்தேடி கண்டுபிடித்து (பிரச்சனையே இல்லை என்றாலும்) போராட்டங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக நான் போராட்டங்கள் கூடாது என்று சொல்லவில்லை. போராட்டங்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது என தான் கூறவருகிறேன். அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மக்கள் பிரச்சனைக்காக போராடுவது போல் வெளியே தெரிந்தாலும், கட்சிகள் தங்கள் சுய நலங்களை தான் அதிகம் வெளிப்படுத்தி வருகின்றன.மேலும், மக்கள் போராட்டம் என்று சொல்லி மீண்டும் மக்களையே அவதிக்குள்ளக்குகிறார்கள்.
சிந்தித்து பாருங்கள், போராட்டங்களை முன்னெடுக்கையில் கட்சிகள் இரண்டு விதமான போராட்டங்களை தான் முன்னேடுக்கின்றன. ஒன்று, பஸ் மறியல், ரயில் மறியல் போன்ற மறியல் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற அறப்போராட்டங்கள் என்று அறியப்படுகிற போராட்டங்கள். இதில் இரண்டிலுமே பொது மக்கள் அவதியடையவே செய்கின்றனர்.மக்களுக்காக போராடும் போது, மக்கள் அவதியுற்றால் அது எப்படி மக்களுக்கான போராட்டமாய் அமையும்?
முதல் வழியில் நேரடி பாதிப்பு என்றால், இரண்டாவதில் மறைமுகமாக பாதிப்பு அல்லது எந்த பயனும் இல்லை. அதனால், போராட்டங்களில் ஒரு புதுமை வேண்டும். இன்று நாங்கள் இந்த நோக்கத்திற்க்காக போராட போகிறோம் என்று அறிவித்து விட்டு, மக்களுக்கான பணிகளை செய்யுங்கள். உதாரணத்திற்க்கு, தேவையான இடங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவுங்கள் அதன் மூலம் மக்களின் கவனங்களை ஈர்க்க முயல வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை செய்து உங்கள் போராட்டத்திற்க்கான காரணங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். இன்னும் என்னென்ன வழிகள் உள்ளதோ சிந்தியுங்கள். ஆனால், அவை அனைத்தும் மக்களின் கவனங்களை ஈர்க்க வேண்டுமே தவிர, அவர்களை அவதிக்குள்ளாக்குவதாக அமைய கூடாது.
2. தேர்தல் பிரச்சாரம்
தேர்தலின் போது எப்படிப்பட்ட பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்? கட்சிகள் பணம் நிறைய செலவு செய்கிறார்களே. பணம் இல்லாமல் எப்படி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள் என நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எனது பதில்….
எப்படி போராட்டங்களில் புதுமை வேண்டுமென நான் கூறினேனோ அதே போல் பிரச்சாரங்களிலும் புதுமையே ஒரு புதிய கட்சிக்கு துணைப் புரியும்.
ஆம், போராட்டங்களை போல் பிரச்சாரங்களையும் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் வெறுக்கவே செய்கின்றனர். பிரச்சாரங்களுக்கு இவ்வளவு பணத்தை செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்பவர்கள், எப்படி வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அவர்கள் தேர்தலில் முதலீடு செய்த பணத்திற்க்கு குறைந்த பட்சம் சில மடங்காவது சம்பாதிக்கவே முயற்சி செய்வர் என்ற கருத்து மக்களிடையே பரவலாக உள்ளது. அதில் உண்மையில்லையா?
மேலும் பிரச்சாரங்களின் போது மக்களுக்கு ஏற்படும் அசெளகர்யங்களும் பிரச்சாரங்களில் மக்களுக்கு வெறுப்பையே தருகின்றன.
ஆனால், இந்த மாதிரியான தேர்தல் பிரச்சாரங்கள் மக்களை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே.சரி. அப்படியென்றால், எப்படி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது?.. ஒரு புதிய கட்சியாக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட வகையான செயல்பாடுகள் கண்டிப்பாக மக்களிடையே உங்களை கொண்டு சேர்க்கும்….
1. மக்களின் விருப்பம் / தேவை அறிந்து தயார் செய்த தேர்தல் அறிக்கையை சமூக வலைதளங்களில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். முடிந்தவரை தொலைகாட்சி நாளிதழ் செய்திகளுக்கு கொண்டு செல்ல முயல வேண்டும்.
2. தேர்தல் பிரச்சாரங்களை தெருவில் இறங்கி செய்து நாங்கள் மக்களுக்கு தொல்லைகளை கொடுக்க மாட்டோம் என அறிக்கை வெளியிட்டு, தகுந்த விவரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும். தொகுதி, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை போன்ற அனைத்தும் அவ்வாறே இருக்க வேண்டும்.
கொடியோ, தோரணமோ, போஸ்டரோ, கட்அவுட்டோ, பேரணிகளோ மேலும் மக்களுக்கு இடையூறு செய்யும் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என அறிவித்து அவ்வாறே செயல்பட வேண்டும்.மக்களுக்கு எங்கள் செயல்களிலும், கொள்கைகளிலும் நம்பிக்கையிருந்தால் பிடித்திருந்தால் மட்டும் ஓட்டு போடவும் என துணிந்து மக்களின் மீது நம்பிக்கை கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.பிரச்சாரங்கள் மேற்கொள்ளாமலே ஒரு கட்சி தேர்தலை சந்திக்கிறது என்ற ஒரு விடயமே மக்களிடம் ஒரு கட்சிக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தரும் என்பது எனது எண்ணம்.
3. இதை அனைத்தையும் விட முக்கியமான ஒன்று. தேர்தலுக்கு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இருப்பது. மேலும், அனைத்து தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திப்பது.
ஒரு புதிய கட்சி, அதுவும் தொடங்கிய சில காலத்திற்க்குள்ளே அனைத்து தொகுதியில் தேர்தலில் நிற்பதும், பிரச்சாரமே இல்லாமல் தேர்தலை சந்திப்பதும் மக்களிடையே ஒரு புது வித நம்பிக்கையை ஏற்ப்படுத்தும். அவையே கட்சியை பற்றி (ஒரளவு நடுநிலையான) தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் கட்சியை பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கும்.
3. முன்மாதிரி தலைவர்கள்
இதை பற்றி யாரும் விவாதிக்கவில்லை. நானே என் கருத்தாக தெரிவித்தேன். ஒவ்வொரு கட்சிகளும் முன்மாதிரி தலைவர்களாக சிலர் புகைப்படங்களை போட்டு கொள்வதும். அவர்களின் கொள்கைகளை தொடர்வதாகவும் சொல்லிக் கொள்கின்றன. இதிலிருந்து சற்றே மாறுபட்டு இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
ஏனேனில், ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு சில கருப்பு பக்கங்களை வரலாறு சொல்லி கொண்டே தான் இருக்கிறது. இனியும் சொல்லத்தான் போகிறது. மேலும், ஒருவரின் பல உடன் பட்ட கருத்துக்களுக்காக ஆதரித்து, உடன் படதா கருத்துக்கள் வரும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் அவற்றை ஏற்று கொள்ளாமல் அவரை தூக்கி பிடிப்பது கட்சிகளின் ஏன் தனிமனித குணமாக கூட இருக்கிறது.
அதனால், யாரையும் முன்னோடிகளாக அறிவிக்காமல், நல்ல கருத்துக்கள் யார் மொழிந்திருப்பினும் அவற்றை மட்டும் தாங்கி கொண்டு செல்ல வேண்டும். அன்றி முன்னோடிகளாக ஒரு சில தலைவர்களின் படங்களை போட்டு கொண்டால் மக்கள் பத்தொடு பதினொன்றாகவே உங்களையும் பார்பார்கள்.
4. சாதிப்பற்று :
இது மிகவும் முக்கியமான ஒரு கேள்வியாக இருந்தது.
இந்தியா, தமிழகம் சாதிகள் மற்றும் மதங்களால் பெரிதும் பிரிவூண்டு நிற்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி அனைத்து சாதியினரையும் இணைத்து நாம் கட்சி நடத்த முடியும்?
இதற்க்கு பல நண்பர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து கொண்டிருந்தனர். நான் முற்றிலும் வேறுப்பட்டு எடுத்து வைத்த கருத்து….
சாதிகள் அனைத்தையும் ஒற்றுமையாக இருக்க செய்ய நீங்கள் நினைத்தீர்களானால் தோற்று தான் போவீர்கள். அதை செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. செய்யவும் விட மாட்டார்கள்.
நீங்கள் சொல்வதைப் போல் எல்லா சாதியினரையும் எப்படி கட்சியில் வைத்து கட்சியை நடத்துவது என்று நினைத்தால் அதில் அர்த்தமே இல்லாமல் போகும். மாற்றாக, சாதிய அடையாளங்களை துறந்தவர்களை மட்டுமே கட்சியில், தேர்தலில் மற்றும் பொறுப்புகளில் அமர்த்துவது தான் உண்மையான வழிமுறையாக இருக்க முடியும். அது தான் சாதியற்ற சமூகத்தை உருவாக்க நினைக்கும் அனைவரது முயற்சியாக பார்க்கப்படும்.
கட்சியிலோ, தேர்தலிலோ தன் சாதிய அடையாளங்களை விட்டு கொடுக்க இயலாதவர் எப்படி சாதியற்ற சமுதாயம் உருவாக பாடுபட முடியும்?
இதில் பல நண்பர்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம். இது என் கருத்து மட்டுமே!
5. சட்டமன்றமா? நகராட்சி மன்றமா?
நான் கூட்டம் நடப்பதற்க்கு முன்பே இந்த இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான திரு.சங்கர் உடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது உங்கள் தேர்தல் நோக்கம் என்ன? எப்படி செயல்படுத்த உள்ளீர்கள் என வினவினேன்.அவர் அதற்கு, முதலில் பஞ்சாயத்து / கவுன்சிலர் தேர்தலில் நிற்பதற்க்கு யோசித்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தார். ஏனேனில், என்ன தான் ஒரு முதலமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ வோ நிதி ஒதுக்கினாலும் கடைநிலையிலுள்ள பஞ்சாயத்து / கவுன்சிலர்கள் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
அதற்கு என் கருத்தை முன் வைக்கும் போது நான் கூறியது…
ஒரு வகையில் நீங்கள் கூறுவது உண்மை எனினும்.இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் மிக தெளிவாக அரசியல் முடிவுகளை எடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அதற்கு மாபெரும் உதாரணம் பஞ்சாயத்து /கவுன்சிலர் தேர்தல்கள் தான். எந்த கட்சி மாநிலத்தை ஆள்கிறார்களோ அவர்களை தான் மக்கள் பஞ்சாயத்து தேர்தலில் பெரும்பாலும் வெற்றி பெற செய்கிறார்கள்.
அதற்கு காரணம் சொல்லி தெரிய தேவையில்லை. அப்படி மாநிலத்தை ஆளும் கட்சியை பஞ்சாயத்திலும் வெற்றி பெற செய்தால் தான் அரசாங்கம் நிறைவேற்றும் திட்டங்கள் சுலபமாக தங்களை வந்தடையும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
அது மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்திற்க்கும் மேல்லுள்ள பஞ்சாயத்து தேர்தலுக்கு ஆட்களை நிறுத்துவதற்க்கு ஆட்களை தேர்வு செய்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அதற்க்கு பதில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது ஒரளவு பலன் தரும். மேலும் அடிப்படை வசதிகளான சாலை, தண்ணீர், போன்றவைகள் தான் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று செய்ய இயலும். அதுவும் மாநில அரசு உதவினால்… மற்றபடி வேறேதுவும் பெரிதாக மாற்றங்களை கொண்டுவர இயலாது.. எனவே போட்டியிடுவதாக முடிவு செய்தால், சட்டசபை தேர்தலை நோக்கி நகருங்கள் என என் கருத்தை சொல்லி முடித்தேன்.
6. கட்சி குழு / உறுப்பினர்கள் / தொண்டர்கள்
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பொழுது இருக்கும் பெரிய சவால்களில் ஒரு பெரிய சவால் என்னவெனில், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் யார்? யார்? ஏன் அவர்கள் தான் நிர்வாகிகளாக இருக்க வேண்டும்? போன்றவை தான் பெரிய தலைவலியாய் அமையும். ஏனேனில் அப்படிப்பட்ட சமுக சூழ்நிலையில் நாம் வளந்துள்ளோம். அதனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.ஆனால், தொண்டர்களை பொருத்தவரை எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. கட்சிகள் மாறி மாறி தங்களுக்கான தொண்டர்கள் சேர்க்கையில் தீவிரம் காண்பிப்பது, தேர்தல் நேரங்களில் வேலை செய்வதற்க்கும், மற்ற கட்சி சார்ந்த பணிகளை செய்யவும், ஓட்டு வங்கியை தக்க வைக்கவும், அதிகரித்து கொள்ளவும்.
இதே போன்றதொரு நடவடிக்கையை மாற்று அரசியல் செய்ய வரும் இளைஞர்களும் மேற்க்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் மாற்றாக இருக்க இயலாது.
மாறாக, தொண்டர்களை சேர்க்கும் வழக்கமே வேண்டாம். ஒரு கட்சிக்கு எதற்க்கு தொண்டர்கள்? தோரணம் கட்டவா? போஸ்டர் ஒட்டவா? கட்அவுட் வைக்கவா? கூட்டத்து கூட்டி வந்து பிரியாணியும் பாட்டிலும் கொடுக்கவா? அல்லது ஓட்டு போடவா?. அப்படியெனில் மேற்சொன்ன எதையும் செய்ய போகதா ஒரு கட்சிக்கு எதற்க்கு தொண்டர்கள்?..
ஓட்டு போடுவதற்க்கு தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று இல்லை. மக்களில் 18 வயது கொண்ட தகுதியுடையவராக இருந்தால் போதுமானது.
மக்கள் மக்களாக இருக்கட்டும் தொண்டர்களாக மாற வேண்டாம். மக்களுக்கு கட்சியின் மீதும் அதன் கொள்கைகள் மீதும் நம்பிக்கை இருந்தால் மட்டும் ஓட்டு போட்டால் போதுமானது. எனவே தொண்டர்களை சேர்க்க நினைக்கும் மற்ற் அரசியல் கட்சிகளை போல் அல்லாமல் செயல்படுவது நல்லது.
7. எதிர் கட்சி எதிரி கட்சி அல்ல
இன்று நாட்டில் அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளும் ஒவ்வொன்றும் மற்ற அரசியல் கட்சிகளை திட்டி தீர்த்து கொள்வது ஒரு வாடிக்கையாக போயிற்று. இவரை அவர் சாடுவதும், அவரை இவர் சாடுவதும் மக்களுக்கு காண கிடைக்கின்ற அன்றாட நிகழ்வாக மாறி போய் விட்டது.
எனவே, ஒரு கட்சி மக்களுக்கு எவை நல்லவையாக இருக்குமே அதற்கு ஆதரவாகவும், அல்லனவற்றிற்க்கு எதிர்பாகவும் இருக்க வேண்டுமே தவிர, தனக்கு எதிரான கட்சி கொண்டு வருவதாலே அதை விமர்சனம் செய்வதும், மறுப்பதும், அதற்க்கு உள் நோக்கம் கற்பிப்பதும் கூடாது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எதிர் கட்சியாக இருக்க வேண்டுமே தவிர எதிரி கட்சியாக அல்ல.
கடந்த சில ஆண்டுகளாக பல இயக்கங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அப்படி தோன்றும் பல இயக்கங்கள் கட்சிகள் மற்றவர்களை நோக்கி வன்மத்தை கக்கிகொண்டே நகர்கின்றன. தங்களிடம் இருப்பதே ஆகச்சிறந்த சித்தாந்தமென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சற்றே நெருங்கி உரையாடும் போது தெரிகிறது காழ்ப்புணர்ச்சி அரசியல், அரசியல் சிந்தனை . இதைத்தவிர்த்து வேறு எந்த ஒரு தொலைநோக்கு பார்வையுமில்லை என்பது தெரிகிறது. சமூக செயல்பாடு என்பது வேறு ? சமூகத்திற்கான செயல்பாடு என்பது வேறு என்ற புரிதல் கூட இவர்களிடம் இல்லை. இப்படித்தான் எல்லா இயக்கங்களும் அல்லது பெரும்பாலான இயக்கங்களும் செயல்படுகின்றன.
இளையதலைமுறை. சற்றே மாறுபாடுகிறது. ஒரு சித்தாந்தை முன் வைக்கிறது. அந்த சித்தாந்தம் கூடி செயல்படுதல் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது. எல்லா பிரச்சினைகளையும் திறந்த மனதோடு அணுகுகிறது.வெவ்வேறு அமைப்புகளோடு சேர்ந்து செயல்பட தயாராகவே நிற்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளையதலைமுறை அமைப்பு அந்த ஊரின் தன்மைக்கேற்ப செயல்பட சிந்திக்க அனுமதிக்கிறது. மேலிருந்து கீழே உத்தரவுகள் வராமல்.. கிழிருந்து வரும் சிந்தனைகளை கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கிறது.
முதலில் அரசியல் கற்போம் என்றே அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு துறை சார்ந்தவர்களை அழைத்து ஒவ்வொரு மண்டலங்களிலும் பேச செய்து புரிந்துணர்வை இளைஞர்களிடம் கொண்டு வருகிறது. இதையே மிகப்பெரிய மாற்றமாக நான் நினைக்கிறேன். அந்த கட்சி ஒழிக இந்த கட்சி ஒழிக என பேசுவதில்லை. மாறாக விளைந்த அல்லவைகளை எப்படி அகற்ற முடியும்.. அதற்கான மாற்று என்ன யோசிக்க தூண்டுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்களை வார இறுதியில் பிரச்சாரத்தில் பங்கேற்க அழைக்கிறது. இதன் மூலம் களப்பிரச்சாரமென்றால் என்னெவென்று புரிய வைக்கிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய பிரச்சாரம் மதியம் 2.30 க்கு முடிந்தது. தோராயமாக ஒரு 500 வீடுகள் மட்டுமே எங்களால் செல்ல முடிந்தது. அப்படியெனில்.. இது எவ்வளவு பெரிய பணி. ஒவ்வொரு வார்ட்டுக்கும் தினப்படி பிரச்சாரம் செய்ய ஒரு குழு இருக்க வேண்டும்...? அந்த குழு செம்மையான உழைப்பை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இப்படி ஒருவர் நிற்கிறார் என்பதே போய் சேரும். இது போக எதிர்கட்சிகளில் சீண்டல்கல்... அதிகாரிகளின் விசுவாசங்கள் என கடந்து செல்ல வேண்டும். இதையெல்லாமே அங்கே பிரச்சாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் நேரிடையாக உணர்க்கிறார்கள்.
பின்னர் அவர்களே முடிவு செய்கிறார்கள்... இந்த தேசத்தின் அரசியலைமைப்பில் தேர்தல் என்பது எவ்வளவு பெரிய சக்தி என்பதை. விளைவு ... சேர்ந்து செயல்படுதலின் அவசியத்தை உணர்கிறார்கள். எங்கள் சித்தாந்தமே உயர்வானது... மற்றவையெல்லாம் கேவலமானது என போதிக்காமல், இனவெறி, மதவெறி, ஜாதிவெறி என ஊட்டாது ஒரு மாற்றுப்பாதையை உருவாக்க இளையதலைமுறை முயல்கிறது.
இளையதலைமுறை அதன் இலக்கை நோக்கி பயணிக்கிறது. உணர்ச்சிகளால் இல்லாமல் உண்மையை உணரும், உணர்த்தும் இயக்கமாக.