உறுப்பினர்

உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்

நாங்கள்

இளையதலைமுறை

உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்

இளையதலைமுறை உறுப்பினர்கள் யாவரும் கீழ்க்கண்ட விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

1.அனைத்து கலந்தாய்வு கூட்டம் மற்றும் சந்திப்பில், காலம் தாழ்த்தாமல் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளப் பழக வேண்டும்.

2.குழுவில் எவரிடமும் எந்த சாதி, மதம், இனம் போன்ற கேள்விகளை கேட்பதோ குழுவை சீர்குலைக்கும் செயல்களில் ஈடு படுவதோ கூடாது.

3. தனி ஒருவரிடம் கருத்து வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக பேசி சுமூகமாக தீர்க்க பட வேண்டும். அவரை பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் செயல்களை ஒரு போதும் செய்ய கூடாது.

4. தன்னுடைய கருத்து மட்டும் தான் சரியானது என்று நீண்ட நெடிய விவாதத்தை மற்றவர்களிடம் முன்வைக்க கூடாது.

5.குழுவில் எவரேனும் தவறான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களை பற்றி மாவட்ட நிர்வாகியிடம் அல்லது தலைமைக் குழுவிடம் கொண்டு சென்று அதை நிவர்த்தி செய்யலாம்.

6.எப்போதும் குறை மட்டுமே கூறி கொண்டு இல்லாமல், மற்றவர்களின் நிறைகளை மனதார புகழக் கற்று கொள்ள வேண்டும்.

7.களப்பணி அல்லது விழிப்புணர்வு பேரணி போன்றவற்றில், தனி மனித துதி பாடல் இல்லாமல், செயல்களின் அடிப்படையில் சம்பந்த பட்ட குழுவை அங்கீகரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

8.அனைத்து செயல்களிலும் நம்பகத்தன்மை (Accountability) மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) மிக முக்கியம்.

9. பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் போன்றவற்றை வாட்சப் குழுவில் பதிவு செய்வதை தவிர்க்கவும்.

10. தான் எடுத்து கொண்ட களப்பணியை யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் செவ்வனே செய்து முடிப்பேன் என்று முழு மன நிறைவோடு செய்ய வேண்டும்.

11.நமது குழுவில் உள்ள பெண்களை சகோதிரியாக பாவிக்கும் நிலையை உருவாக்கவும்.

12.நடிகரைப் பற்றியோ, அரசியல் தலைவரை அல்லது வேறு பிரபலங்களைப் பற்றியோ குறைகூறும் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தரக்குறைவான வார்த்தைகளை ஒரு போதும் உபயோகபடுத்த கூடாது.

13.மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் திகழ வேண்டும். உதாரணம்: குப்பையை குப்பை தொட்டியில் போடுவது, சாலை விதிகளை பின்பற்றுவது, பொது இடங்களில் வரிசையை பின்பற்றுவது, அரசாங்கத்தை ஏமாற்றாமல் முறையாக வரி செலுத்துவது, அரசு சார்ந்த சேவைகளுக்கு லஞ்சம் தருவதை தவிர்ப்பது போன்ற பல.

14. செய்தி நிறுவனங்கள் நம்மை தேடி வர வேண்டுமே தவிர, நம்முடைய செய்திகளை செய்திதாள்களில் பிரசுரிக்க பணத்தை கொடுத்து சாதிக்க நினைப்பது தவறான முன்னுதாரணம்.

15.அனைத்து அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும், மாவட்ட நிர்வாகிக்கு அல்லது தலைமை குழுவிற்கு தெரியபடுத்தினால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.

16.ஒரு போதும் அமைப்பை மற்றவர்களிடம் விட்டு கொடுத்து பேச வேண்டாம். யாராவது தவறை சுட்டி காட்டினால், திருத்தி கொள்கிறோம் என கூறலாம்.

17.அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும், ஒவ்வொரு மாதமும் முறையாக செலவு செய்து கணக்கு காண்பித்து அனைவரின் நம்பிக்கையை பெற வேண்டும்.

18.முடிந்தவரை அவ்வபோது ஆகும் செலவுகளை அப்போதே அனைவரும் பகிர்ந்து கொள்ளவும். யாராவது ஒருவருக்கு அதீத நிதி சுமையை ஏற்ற வேண்டாம். யாராவது ஒருவர் அதிக நன்கொடை அளிப்பதால், தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த நினைப்பது மிகவும் தவறான செயலாகும். அதனால் பெரும்பாலும் ஒருவரிடமே அதிகப்படியான நிதியைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

19.தான் பின்பற்றும் நல்ல நேரம் பார்த்தல், ஜோதிடம், இறை நம்பிக்கை போன்றவற்றை அமைப்பின் மீது திணிக்க கூடாது.

20.யாருடைய செயல்பாடுகளும் பதவியை நோக்கியோ அல்லது வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு இருக்க கூடாது.

21.இயக்க செயல்பாடுகளால் உங்களுடைய சொந்த வாழ்க்கை நிலையில் தொந்தரவு இருந்தால் இயக்க பணிகளை விடுத்து மனது சார்ந்த ஆதரவுகளை மறைமுகமாக வழங்கலாம். தற்காலிகமாக வெளியேறவும் அனுமதி உண்டு.

22.இயக்க உறுப்பினர்களிடம் தனிப்பட்ட விஷயங்களுக்கு கடன் கேட்பது / கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

23.நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம், இளையதலைமுறை உறுப்பினர்களுக்கு வருட சந்தா ரூ 365 வருடம் தவறாமல் புதுப்பித்துக்கொல்லுதல் அவசியம். இருப்பினும் சமூகக் களப்பணிகளில் ஈடுபட சந்தா கட்டாயமில்லை.சந்தா செலுத்தாமலே தாராளமாக இளையதலைமுறை பெயரிலே இயங்கிக் கொள்ளலாம்.

24.தலைமையின் செயல்பாடுகளில் கேள்வியெழுப்ப உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு.தக்க விளக்கமளிப்பதும் தலைமையின் கடமையாகும். அமைப்பின் செயல்பாடுகளில் முரண்பாடு ஏற்படும்போது அமைப்பைப் பொதுவெளியில் தூற்றாமல் தாமாக விலகிவிட வேண்டும்.

25.ஓர் உறுப்பினர் தொடர்ந்து அமைப்பின் விதிகளை மீறி செயல்படும்போதோ அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிற்க முயலும்போதோ அவரை அமைப்பின் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் நீக்க தலைமைக்கு முழு அதிகாரம் உண்டு.