எங்களை பற்றி

இலக்குகள்

நாங்கள்

இளையதலைமுறை

இலக்குகள்

'அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி'. ஆகவே முதலில் அரசனை மாற்றுவோம். மக்களாகிய நாமும் அரசனோடு சேர்ந்து சமூக மாற்றத்தை நம்மில் கொண்டுவர வேண்டும். அரசும் மக்களும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே நிலையான மாற்றம் நிகழும்.

மக்கள் சார்ந்த அமைப்பு உருவாகும் காரணத்தால், தலைவர் என்று எவரையும் இதுவரை முன்னிறுத்தவில்லை. அரசியல் கட்சியாக உருமாறவில்லை. ஒரு வலுவான அமைப்பாக உருவெடுக்கும் போது, தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்ட நிர்வாகிகள் என தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு தெரு, ஊர், தாலுகா, மாவட்டம் என பல தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.

1. தனிப்பட்ட ஒருவரை முன்னிறுத்தாமல் கூட்டுத் தலைமையை உருவாக்கி இளைஞர்களை முன்னிறுத்தி அரசியல் களம் காணுதல். தனிப்பட்ட அரசியல் தலைவர்களையும் மற்றும் கட்சிகளையும் இகழ்வாக பேசும் காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தவிர்த்து, எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சியாய்ப் பார்க்காமல் நேர்மையுடனும் மாண்புடனும் கூடிய ஒரு தூய அரசியலை முன்னெடுத்தல்.

2. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம அளவில் இடம்பெறக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குதல். அதற்கான பாதுகாப்பை உறுதிசெய்தல். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர்கள் முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்க வழிவகை செய்தல்.

3. இலஞ்சம் ஊழலை ஒழிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் சேர்ந்து மக்களையும் ஊழலற்ற சமுதாயத்தை நோக்கி வழிநடத்துதல்.

4. சாதி, மதம், இனம், மொழி, நிறம் என எந்த பாகுபாடும் இல்லாமல் வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையான பொதுநலம் கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல்.

5. விவசாயத்தைக் காத்தல்; புதிய உக்திகள் மூலம் விவசாயத்தை முன்னேற்றுதல். விவசாயம் சார்ந்த படிப்புகளை அதிகரித்தல். மாணவர்களை பொறியியல், மருத்துவம் தாண்டி விவசாயம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க வழிகாட்டுதல்.

6. நீர்நிலைகள், இயற்கை வளங்கள் காக்க உரிய திட்டங்கள் வகுத்து, இழந்த நீர்நிலைகளை மீட்டெடுப்பதோடு, புதிய நீர்நிலைகள், தடுப்பணைகளை உருவாக்கி நீர்த் தேவையில் தன்னிறைவு பெறுதல்

7. கல்வியின் தரம் மற்றும் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தி பல புதிய அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டு, அறியாமை இருள் நீங்க அனைவருக்கும் அடிப்படை சட்டம், அடிப்படை அரசியல், அடிப்படை உரிமை, அடிப்படை விவசாயம் போன்ற வாழ்க்கைக் கல்விகள் துவக்கப்பள்ளி முதல் பயிற்றுவிக்க வழி வகை செய்தல்.

8. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து மாணவர்தம் குடும்பங்களின் பொருளாதார நிலை உயர வழிவகை செய்தல். மேலும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதோடு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார்த் துறைகளில் முன்னுரிமை வழங்கி அவர்தம் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்தல்.

9. அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, சுயதொழில் செய்ய ஊக்குவித்து, தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கி, தேவையான நிதியுதவி ஏற்படுத்தித் தருதல்.

10. வேலைவாய்ப்பு தேடி இளைஞர்கள் சென்னை போன்ற பெருநகரங்கள் நோக்கி படையெடுப்பதைத் தவிர்க்கும்பொருட்டு தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க, தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பரவலான வளர்ச்சியை ஏற்படுத்துதல்..

11. அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தி தேவையான நவீன கருவிகளைக் கொண்டு முறையான உயர்தரமான சிகிச்சைகளை ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாக வழங்குவதோடு கிராமங்கள் தோறும் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்களுடன் மருத்துவமனைகளை ஏற்படுத்துதல்.

12. புகை, மது போன்றவற்றை கட்டுபடுத்தத் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிகள்/தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு, படிப்படியாக போதையற்ற சமூகத்தை உருவாக்குதல்.

13. தமிழினம் சார்ந்த பிரச்சனைகள், மீனவர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை போன்றவற்றிற்கு மத்திய அரசோடு இணைந்து சுமூக தீர்வு எட்டுதல். கச்சத்தீவு மீட்கப்பட்டு மீனவர் உரிமையை நிலைநாட்டுதல்.

14. திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி முதலே தகுந்த பயிற்சியளித்து, தேவையான ஆலோசனைகளும் நிதியுதவியும் வழங்கி ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் திறம்பட விளையாடி நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட செய்தல்.

15. இலவசங்களுக்கு மக்களை அடிமையாக்காமல், மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்தல்.